Pages

வெங்காயத்தில் என்ன இருக்கு?

Tuesday, August 24, 2010

வெங்காயம் இந்த சொல்லை நாம் அதிகம் கடிந்து கொள்ள பயன் படுத்துகிறோம். ஆமா பெரிய வெங்காயம் என்று அனைவரும் சொல்லதில் ஆச்சர்யமில்லை. உண்மையில் வெங்காயம் பெரியது தான் இதில் உள்ள மருத்துவ குணங்கள் எண்ணிலடங்கா. வெங்காயத்தை சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரு வகை உள்ளது. நம் தமிழ் மக்கள் வெங்காயத்தை பயன்படுத்தாமல் குழம்பு வைப்பது குறைவு. அதிக பேர் பயன்படுத்தும் சமையல் அறை பொருள் வெங்காயம். இவ்வெங்காயத்தால் ஒரு முறை ஆட்சி மாற்றமே நடந்து உள்ளது.

ஆங்கிலத்தில் 'Onion' என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது. இந்த 'ஆனியன்' என்ற வார்த்தைக்கு மூலமான 'இலத்தீன்' சொல்லான 'யூனியோ' என்பதற்கு 'பெரிய முத்து' என்று பொருளாம். பல வித உடற்கோளாறுகளையும் தீர்த்துவைக்கும் வெங்காயத்திற்கு இந்தப் பெயர் பொருத்தம்தானே?


'என் பெண்ணைக் கண் கலங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று கூறும் மாமனார், மாமியாரிடம் 'கண்டிப்பாக வெங்காயம் நறுக்காமல் பார்த்துக்கொள்கிறேன்' என்று மாப்பிள்ளை சொல்வது பழைய கால நகைச்சுவைக்காட்சிகளில் அடிக்கடி இடம் பெறுவதுண்டு. வெங்காயத்தைத் தண்ணீரில் நனைத்துவிட்டு நறுக்கினால் அவ்வளவாகக் கண் எரியாது, வெங்காயம் நறுக்குகையில் 'சூயிங் கம்' சாப்பிட்டால் கண் எரியாது என்று பல உத்திகள் கொடுக்கப்பட்டாலும் 'தன்னை வெட்டிக் கொல்பவரை, தனது அச்செயலுக்காக வருந்தி அழ வைக்காமல்' வெங்காயம் விடுவதில்லை. வெங்காயம் ஏன் கண்களைக் கலங்கடிக்கிறது தெரியுமா? அதில் உள்ள வேதிமமான 'அலைல் ப்ரொபைல் டை சல்பைடு' தான் இதற்குக் காரணம். இந்த ஒரு சங்கடம் தவிர, வெங்காயத்தால் மற்ற எல்லாமே நன்மை, நன்மை, நன்மையைத் தவிர வேறில்லை என்று அடித்துச் சொல்லலாம்.


வெங்காயத்தில் புரதச் சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே, நம் உடம்புக்கு ஊட்டச்சத்து தருகிறது. பல்வேறு நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் பிரதான இடத்தை வகிக்கின்றது. பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள், வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயம் பல்வேறு நோய்களை குணமாக்க வல்லது. இதய சக்தியைத் தருகிறது. நரை, தலை வழுக்கையைத் தடுக்கும். உடல் வெம்மையைத் தணிக்கும். இரத்த விருத்தி, எலும்புக்கு வலிமை அளிக்கிறது. பித்த நோய்கள், கண் நோய்கள், வாத நோய்களை குணமாக்குகிறது.

வெங்காயத்தின் பயன்கள்:

1) நாலைந்து வெங்காயத்தைத் தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட, பித்தம் குறையும். பித்த ஏப்பம் மறையும்.

2) சம அளவு வெங்காயச் சாறையும், வளர் பட்டைச் செடி இலைச் சாறையும் கலந்து காதில் விட, காது வலி குறையும்.

3) வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்துச் சூடாக்கி, இளம் சூட்டில் காதில் விட, காது இரைச்சல் மறையும்.

4) வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத் தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டுத் தூளையும் இவற்றைப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட, எல்லாவிதமான மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5) வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட, உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

6) வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாகச் சுட வைத்து, உடையாத கட்டிகள் மேல் வைத்துக் கட்ட, கட்டி உடனே பழுத்து உடையும்.

7) வெங்காயச் சாறு, சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். வெங்காயச் சாற்றை மோரில் விட்டுக் குடிக்க, இருமல் குறையும்.

8) வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து, வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர, பல்வலி, ஈறுவலி குறையும்.

9) வெங்காயப்பூ, வெங்காயத்தைச் சமைத்து உண்ண, உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு குறையும்.

10) வெங்காயத்தை அவித்து, அதோடு தேன், கற்கண்டை சேர்த்துச் சாப்பிட, உடல் பலம் ஏறும்.

11) வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும்பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

12) வெங்காயத்தை வதக்கி, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

13) படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றைப் பூசிவர மறைந்துவிடும்.

14) திடீரென மூர்ச்சையானால், வெங்காயத்தைக் கசக்கி முகரவைத்தால், மூர்ச்சை தெளியும்.

15) வெங்காயச் சாற்றையும், தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்துச் சாப்பிட்டால், சீதபேதி நிற்கும்.

16) வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க, நன்கு தூக்கம் வரும்.

17) பனைமரப் பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, சூடுபடுத்தி குடித்துவர, மேக நோய் நீங்கும்.

18) வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட, மேகநோய் குறையும்.

19) வெங்காயம் குறைவான கொழுப்புச் சத்து கொண்டது. எனவே, குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20) பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தைத் தரும். பச்சை வெங்காயத்தைத் தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21) வெங்காயம் வயிற்றில் உள்ள சிறுகுடல் பாதையைச் சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்திற்கும் உதவுகிறது."

22)  கொஞ்சம் வெங்காயத்தை அரைத்து, உப்பு, வெறும் சோறு இவற்றுடன் கலந்து பிசைந்து வெற்றிலையில் வைத்துக் கட்டுப்போட்டால், நகச்சுற்று சரியாகும்.


23)  தேள் கொட்டிய இடத்தில் உடனடியாக வெங்காயத்தை நறுக்கித் தேய்ப்பதன் மூலமும், பாம்புக்கடிக்கு பச்சை வெங்காயத்தை மென்று தின்பதன் மூலமும், நஞ்சால் ஏற்படும் பாதிப்பு குறையும். பிறகு முறையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளலாம்.


24)  சின்னவெங்காயத்தை வதக்கித் தொடர்ந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். நாள்பட்ட பிரச்னைகள் உள்ளவர்கள் வெங்காயத்தை, விளக்கெண்ணெயில் வதக்கிச் சாப்பிடலாம். உடனடியாகப் பலன் உண்டாகும். வெங்காயம் சிறு குடல் அழற்சியைப்போக்கவும், குடல் பாதையை சுத்தம் செய்யவும்கூட உதவுகிறது.


25) மஞ்சள் வெங்காயம் இவற்றை அரைத்துச் சுட வைத்து அவற்றை வேனல் கட்டிகளில் தடவினால், சீக்கிரம் பழுத்து உடைந்துவிடும். முகப்பருத் தொல்லை உள்ளவர்கள் வெங்காயத்தை நறுக்கி, பருக்களின் மீது தேய்க்க பருத்தொல்லை போயே போச்சு.

26) வெங்காயத்தை அரைத்து மோரில் கலந்து குடித்தால் இருமல் நீங்கும். குறிப்பாக உடல் சூட்டினால் ஏற்படும் வறட்டு இருமலுக்கு இது மிகவும் நல்லது. புகை பிடிப்பதால் அல்லது தொழிற்சாலைகளில் மாசு கலந்த காற்றை சுவாசிக்க நேர்பவர்கள், வெங்காயச் சாற்றை அடிக்கடி அருந்திவர நுரையீரல் சுத்தமாகும். இரத்த அழுத்ததைக் குறைக்கும் வல்லமையும் வெங்காயத்திற்கு உண்டு.


27) வீட்டிற்கு 'வண்ணம்' பூசுகிறீர்களா? அந்த நெடியைத் தாங்க முடியவில்லையா? உடனே இரண்டு பெரிய வெங்காயங்களை இரண்டாக நறுக்கி வீட்டின் நான்கு மூலையிலும் வையுங்கள். அதே போல், வீட்டில் நோயாளிகள் இருந்தாலும் கிருமிகள் பரவாமல் தடுக்க, இதைச் செய்யலாம். ஏனெனில் , வெங்காயம் சுற்றுப்புறத்தில் உள்ள கிருமிகளை உறிஞ்சிவிட வல்லது. எனவே, சமையல் செய்ய வெங்காயம் தேவையானால், நறுக்கி நீண்ட நேரம் வைக்காமல் உடனடியாகப் பயன்படுத்தி விடுவது நலம்.

15 comments:

{ எல் கே } at: August 24, 2010 at 12:48 AM said...

hmm nallathan irukku nandri sangameswaran

{ ஜூனியர் தருமி } at: August 24, 2010 at 1:02 AM said...

அடக்கடவுளே... கண்ட நாதாரியயெல்லாம் வெங்காயம்னு திட்டி, வெங்காயத்த அவமானப் படுத்திட்டேனே.. சாரி வெங்காயம்...

பயனுள்ள பதிவு... நன்றி.

{ வெறும்பய } at: August 24, 2010 at 1:09 AM said...

அனைத்தும் அரிய தகவல்கள்.. படிக்கும் போதே மலைத்து போய் விட்டேன்.. நாம் தினமும் பயன்படுத்தும் வெங்காயத்தினால் இத்தனை பயன்களா...

பகிர்வுக்கு மிக்க நன்றி..

{ எம்.எம்.அப்துல்லா } at: August 24, 2010 at 1:22 AM said...

// கண்ட நாதாரியயெல்லாம் //

இது ஒரு சாதியை இழிவு படுத்தும் சொல். தவிர்க்கலாமே??

{ மோகன் குமார் } at: August 24, 2010 at 2:12 AM said...

இங்கிருத்து பிடிக்கிறீங்களோ இவ்வளவு தகவல்களை?

{ மங்குனி அமைச்சர் } at: August 24, 2010 at 6:22 AM said...

என்னக சார் முக்குயமான உபயோகத்த விட்டுடிங்க , அது நம்பர் ஒன் சார் ,

***1 ) எல்லாரையும் திட்டு வதற்கு உபயோகப்படும்

{ சேட்டைக்காரன் } at: August 24, 2010 at 6:51 AM said...

இனிமேல் யாராவது ’போடா வெங்காயம்,’னு சொன்னா, இதை வாசிச்சுக் காட்டணும்! அவ்வளவு கேள்விப்பட்டிராத, மலைப்பூட்டும் தகவல்கள்.

{ ஆர்.கே.சதீஷ்குமார் } at: August 24, 2010 at 8:11 AM said...

வெங்காயத்தோட முழு சங்கதியயும் உறிச்சிட்டீங்க போல

{ றமேஸ்-Ramesh } at: August 24, 2010 at 8:11 AM said...

வெங்காயத்தில் இவ்வளவா.... அப்படினா... உங்களை வெங்காயம் எண்டு திட்டலாமே.....
தகவலுக்கு நன்றிப்பா

{ அகல்விளக்கு } at: August 24, 2010 at 8:14 AM said...

பயனுள்ள பதிவு அண்ணா...

இதுபோல் நிறைய பதிவுகளை எதிர்பார்க்கிறேன்... :)

{ சுசி } at: August 24, 2010 at 10:21 AM said...

அப்ப்ப்ப்பா..

இவ்ளோ இருக்கா..

{ நித்திலம்-சிப்பிக்குள் முத்து } at: August 24, 2010 at 10:38 AM said...

அருமையான த்கவல்கள். நன்றி.

{ ஹேமா } at: August 24, 2010 at 1:48 PM said...

வெங்காயத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா !

இனி யாரையும் "வெங்காயம்" என்று திட்டக்கூடாது சங்கவி.

நான் இங்கு எத்தனையோ நாட்டவர்களைப் பார்த்த அளவில் நம்மவர்கள்தான் வெங்காயம் கூடுதலாக உணவில் சேர்த்துக்கொள்கிறோம்.

{ Chitra } at: August 24, 2010 at 5:16 PM said...

நல்ல பயனுள்ள பதிவுங்க....

இங்கு வெள்ளை - மஞ்சள் - மற்றும் சிவப்பு வெங்காயம் கிடைக்கிறது..... எல்லா வெங்காயத்திலும் அதே பயனா? இல்லை, சிவப்பில் மட்டும் தானா?

{ Thomas Ruban } at: August 24, 2010 at 10:47 PM said...

வெங்காயத்தினால் இத்தனை பயன்களா என்று வியந்தேன் நன்றி ..

//2) சம அளவு வெங்காயச் சாறையும், வளர் பட்டைச் செடி இலைச் சாறையும் கலந்து காதில் விட, காது வலி குறையும்.

3) வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்துச் சூடாக்கி, இளம் சூட்டில் காதில் விட, காது இரைச்சல் மறையும்.//

இதனால் செவித்திறன் பாதிக்கப்படாதா?

Post a Comment