இன்றைக்கு கல்வி அனைவருக்கும் இன்றியமையாத ஒன்று. கூலி வேலைக்கு செல்பவர்கள் கூட எப்படியாவது கஷ்டப்பட்டு என் மகனை படிக்க வைத்து விட்டால் போதும் என கூறுகிறார்கள். ஒருவனுக்கு எத்தனை செல்வம் இருந்தாலும் கல்வி இல்லை என்றால் படிக்க வில்லையா என்று ஏளனமாக பார்க்கும் காட்சி நிறைய இருக்கிறது.

வாழ்க்கைக்கு தேவையான கல்வி பல வேறுபட்டு உள்ளது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவனுக்கு ஒரு பாடத்திட்டம், மெட்ரிக்குலேசன் பள்ளிக்கு ஒரு பாடத்திட்டம் இன்னும் பல பாடத்திட்டங்கள் உள்ளன. கல்வி என்பது பணம் இருப்பாவர்களுக்கு ஒரு கல்வியும் பணம் இல்லாதவர்களுக்கு ஒரு கல்வி என்ற நிலைதான் இருந்தது. இந்நிலையில் அரசு பல காலங்களாக யோசிக்கபட்டு இருந்த சமச்சீர் கல்வி முறை இந்த ஆண்டு முதல் அமுலுக்கு வருகிறது. இந்த சமச்சீர் கல்வி முறை பற்றி நாம் நிறைய தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

சமச்சீர் கல்வி முறை என்றால் என்ன?
அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான - தரமான கல்வியை வழங்கிட, ஒரு பொதுக் கல்வி வாரியம் அமைக்கப்பட வேண்டும். அனைவருக்கும் ஒரே மாதிரியான தேர்வு முறை, ஒரே எண்ணிக்கையிலான தேர்வுத் தாள்கள், ஒரே மாதிரியான பாடப் புத்தகங்கள், ஒரே மாதிரியான கல்வி கற்பிக்கும் முறை ஆகியவற்றை உள்ளடக்கியது சமச்சீர் கல்வி முறை.

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.  இதில் நான்கு பிரிவுகளாகத் தனித்தனித் தேர்வுகள் நடந்து வருகின்றன என்பதே நடைமுறை . தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்புக்கு அதிகள விலான மாணவர்கள் எழுதுவது எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு. இதற்கான மொத்த மதிப்பெண் 500 ஆகும். இதுதவிர, மேலும் மூன்று பொதுத் தேர்வுகள் நடைபெறுகின்றன. 

தற்போது அதிகளவில் மாணவர்களை ஈர்த்து வருபவை மெட்ரிகுலேஷன் பள்ளிகள். தனியார் கல்விக்கூடங்கள் பலவற்றிலும் மெட்ரிகுலேஷன் முறையிலான பாடத்திட்டமே உள்ளது. 10-ஆம் வகுப்புக்கான மெட்ரிகுலேஷன் பொதுத்தேர்வின் மொத்த மதிப்பெண் 1100 ஆகும். ஆங்கிலோ- இந்தியன் பள்ளிகளுக்கெனத் தனியாக ஒரு பொதுத்தேர்வு இருக்கிறது. அதற்கான மொத்த மதிப்பெண் 1000 ஆகும். நான்காவதாக ஓ.எஸ்.எல்.சி. எனப்படும் ஓரியண்டல் முறை கல்விக்கான பொதுத்தேர்வுக்கு மொத்த மதிப்பெண்கள் 600.

இப்படி நான்கு வகையானப் பொதுத் தேர்வுகள் நடைபெறும் நிலையில், ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பாடத்திட்டம், ஒவ்வொரு அளவுகோல் படியான மதிப்பெண்கள் நிலவுகின்றன. பத்தாம் வகுப்பை முடித்து, பதினொன்றாம் வகுப்பில் எந்தப் பாடப்பிரிவைத் தேர்வு செய்வது என்கிற நிலைக்கு மாணவர்கள் வரும்போது இது சிக்கலை ஏற்படுத்துகிறது. மெட்ரிகுலேஷன் முறையில் படித்துவிட்டு, +1 வகுப்பில் சேர்கிற மாணவர்களால் நன்கு படிக்க முடியும் என எஸ்.எஸ்.எல்.சி. முறையில் படித்த மாணவர்கள் நினைக்கிறார்கள். அதுபோல, மற்ற பாடத்திட்டங்களில் படித்து வந்தவர்களிடையிலும் எந்தப் பாடத்திட்டம் சிறப்பாக இருக்கும் என்கிற குழப்பம் இருக்கிறது. இந்தக் குழப்பம் மாணவர்களோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. பெற்றோருக்கும் இது பரவி, பெருங்குழப்பத்தை ஏற்படுத்துகிறது. 

ஒரு மாநிலத்தில் நடைபெறும் பொதுத்தேர்வுகளில் இத்தனைப் பிரிவுகள் என்கிறபோது, கல்வியின் தரம் பற்றிய கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கு விடைதான் சமச்சீர் கல்வி. தமிழகத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களும் ஒரேவிதமான பாடத்திட்டத்தை பயில்வது என்பதுதான் சமச்சீர் கல்வி. இது குறித்து ஆய்வு செய்து, அறிக்கையை வழங்குவதற்காக கல்வியாளரும் முன்னாள் துணை வேந்தருமான முத்துக்குமரன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைகள் அரசிடம் அளிக்கப் பட்டன.

ஒரே விதமான பாடத்திட்டம், ஒரே அளவு கோல்கொண்ட மதிப்பெண்கள், ஒரே விதமானப் பொதுத்தேர்வு என்பதுதான் முத்துக்குமரன் குழு அறிக்கை பரிந்துரைத்த சமச்சீர் கல்வியின் அடிப்படை அம்சமாகும். இக்கல்வியை தாய்மொழி யான தமிழ்மொழியில் பயிற்றுவிக்க வேண்டும் என்பதையும் முத்துக்குமரன் குழு அறிக்கை வலியுறுத்தியது. இதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன.

நல்ல லாபம் தரும் வணிக மையங்களாக கல்வி நிலையங்கள் மாறிவிட்ட சூழலில், பாடத் திட்டத்திலும் ஏற்றத்தாழ்வுகள் நிலவுமேயானால் அது அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர் களையும்; கிராமப்புற மாணவர்களையும்; ஏழை மாணவர்களையும் பெரிதும் பாதிக்கும் என்பதை கல்வியாளர்கள் உரத்த குரலில் தெரிவித்தனர். தமிழகத்தில் 69 சதவிகத இடஒதுக்கீட்டின் வாயிலாக சமுதாய ரீதியில் பின்தங்கிய சமுதாயத் தினர் கல்வியினையும் வேலை வாய்ப்பினையும் பெற்று வருகின்றனர். கல்வியில் ஏற்றத்தாழ்வு நிலவினால், இந்த இடஒதுக்கீட்டின் உண்மையான பலன் கிடைக்காமல் போய், சமூக நீதிக் கொள்கைக்கு ஊனம் ஏற்பட்டுவிடும் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினார்கள். 

இந்நிலையில்தான், எதிர்ப்புகளை மீறி சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த முன் வந்தது தமிழக அரசு. இது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாகும். முதல் கட்டமாக, வரும் கல்வியாண்டிலிருந்து ஒன்றாம் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலும் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இத் திட்டத்திற்கு ஒருசில கல்வி நிறுவனங்களிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதுடன், சமச்சீர் கல்வித் திட்டத் தினால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும், அதனால் இத்திட்டத்தை எதிர்த்து சட்ட ரீதியான போராட்டங்களை நடத்தப் போவதாக வும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அரசுத் தரப்பில் இதற்கு உடனடி விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.

தற்போது நிலவும் நான்குவித பாடத்திட்டங் களில் ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற வற்றைத் தள்ளிவிடுவது சமச்சீர் கல்வி முறையின் நோக்கமல்ல. நான்குவித பாடத்திட்டங்கள் குறித்தும் கல்வி வல்லுநர்கள் ஆலோசித்து, அவற்றிலிருந்து சிறப்பான அம்சங்களைத் தேர்ந்தெடுத்து உருவாக்குவதே சமச்சீர் கல்வித் திட்டம் என்றும், தற்போதுள்ளபடியே தமிழ்
மற்றும் பிற மொழிகளை பயிற்சி மொழியாகக் கொண்டு இப்பாடத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தமிழக முதல்வர் விளக்க அறிக்கை அளித்தார். இதனையடுத்து, எதிர்ப்புக் குரல்கள் தணிந்துள்ளன. இதன் மூலமாக, வரும் கல்வி யாண்டில் சமச்சீர் கல்வித் திட்டத்தின் முதல் கட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான சாத்தி யங்கள் அதிகரித்துள்ளன.

மாநில அளவிலான பலவித கல்வி முறை களுக்குப் பதில் ஒரேவிதமான கல்வி முறை என்பது பாராட்டுக்குரியது. அதே நேரத்தில், பயிற்சி மொழி வெவ்வேறாக கடைப்பிடிக்கப்படும் என்பதால் முழுமையான அளவில் சமச்சீர் முறையின் பலன் கிடைத்துவிடாது. தாய்மொழியே பயிற்சி மொழியாக அமையும்போது, மாணவர்கள் வெறும் படிப்பு இயந்திரங்களாக இல்லாமல் சிந்தனையாற்றல் மிக்கவராகத் திகழ்வார்கள் என்பதை உலகளாவிய கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். பாடங்கள் தாய்மொழியிலும், பிறமொழிப் பயிற்சிக்கு கூடுதல் வகுப்பு நேரங்களும் ஒதுக்கப்படும்போது மாணவர்களின் சிந்தனைத் திறனும் ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளை சரளமாகப் பேசும் ஆற்றலும் அதிகரிக்கும்.

சமச்சீர் கல்வியின் முதல்கட்டத்தில் அதற்கான வாய்ப்புகள் தென்படவில்லை. அது போல, மாநில அளவிலான நான்குவித பாடத் திட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டாலும் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் என்பது பல பள்ளிகளில் நடைமுறையில் உள்ளது. அத்தகைய பள்ளிகளில் பயிலும் தமிழக மாணவர்களின் கல்வியளவுகோல் வேறுவிதமாக இருக்கும்.

இது போன்ற சிக்கல்கள் இருந்தாலும், இவற்றையே காரணம்காட்டி சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதைவிட, இந்த சிக்கல்களை எதிர்காலத்தில் தீர்ப்பதற்கானத் திட்டங்களோடு சமச்சீர் கல்வியின் முதல் கட்டத்தை செயல்படுத்துவதே இன்றைய தேவை யாகும். சமச்சீர் கல்வி என்னும் விதை இப்பொழுதுதான் ஊன்றப்பட்டு உள்ளது.

இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான மொட்டுகளும், இலட்சக்கணக்கான பூக்களும் பூத்து மலரட்டும். மொட்டுக்களுக்கும், பூக்களுக்கும் இப்போதே எனது வாழ்த்துக்கள்.

இக்கட்டுரையை யூத் புல் விகடனுக்கு அனுப்பி இருந்தேன் அவர்களும் வெளியிட்டார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்...
www.vikatan.com