Pages

வெற்றிலையின் மகத்துவம்....

Friday, January 29, 2010 42 comments
 வெற்றிலை நமது பாரம்பரியத்தில் ஊரிய ஒன்று. நமது வீட்டிலோ, உறவினர் வீடடிலோ எங்கு விருந்துக்குச் சென்றாலும் விருந்து சாப்பிட்டவுடன் அனைவரும்   தேடுவது    வெற்றிலையைத்
தான். நமது முன்னோர்கள் நமக்கு பல நல்ல பழக்க வழக்கங்களை பழக்கி உள்ளனர் இதில் முக்கியமானது வெற்றிலை. வெற்றிலையை பற்றி பல பாடல்கள் வந்து இருக்கின்றது. வீட்டில் எந்த விசேசமானலும் வெற்றிலைக்கு முக்கியத்துவம் உண்டு. திருமணத்திற்கு முதன் நிச்சியதார்த்தம் என்று நடத்துவார்கள் இதில் வெற்றிலை தான் அனைவருக்கும் கொடுப்பார்கள். அந்த அளவிற்கு நம்முடன் ஊறிப்போனது வெற்றிலை.
கிராமங்களில் வசதி படைத்த ஆட்கள் வீட்டுக்குச்சென்றால் வாங்க வாங்க என்று வரவேற்றுவிட்டு தாம்பூலத்தட்டை நீட்டுவார்கள். அதில் வெற்றிலை தான் இருக்கும். தமிழர்களின் வாழ்வில் மருந்தாகவும், உணவாகவும், உணவிற்குப் பிறகான உபச்சார பண்டமாகவும் பயன்பட்ட வெற்றிலை நம் பண்பாட்டுச் சின்னமாகவும் திகழ்கிறது. திருமணத்திற்கு உறவினர்களை அழைக்கும் போது வெற்றிலை கொடுத்து அழைக்கும் பழக்கம் இன்றும் உண்டு. திருமணத்திற்கு வரும் உறவினர்களும், நண்பர்களும் அன்பளிப்பை வெற்றிலையில் வைத்து தான் கொடுப்பார்கள்.
கிராமங்களில் வெற்றிலை சமாதான சின்னமாக விளங்குகிறது. சண்டை போட்ட இருவரை சமாதானப்படுத்த ஊர்ப் பெரியவர்கள், வெற்றிலையைக் கொடுத்து ஒருவருக்கு ஒருவர் மாற்றிக் கொள்ளச் செய்வார்கள். உறவை விரும்பாதவர்கள் வாங்கி அதைக் கிழித்துப் போட்டு தன் எதிர்ப்பைக் காட்டுவர்.
வெற்றிலையின் மருத்துவப்பயன் :
வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது.
 வயிற்றுவலி:
இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி 5 வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்தக்கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும். ஒவ்வொரு வெற்றிலையையும் வதக்கிய பின் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அந்த கசாயத்தை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும்.
தலைவலி:
வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.
தேள் விஷம்:
இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.
சர்க்கரை வியாதி:
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.
அல்சர்:
அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.
 • பொதுவான குணம். சீதம் நீக்கும், வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும்.
 • வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும்.
 • வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.
 • குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.
 • வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.
 • குழந்தைகளுக்கு மலர்ச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.
 • வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன் தரும்.
 • கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கோடுக்க வயிற்று உப்புசம், மந்தம், சன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம் வயிற்று வலி குணமாகும்.
 • வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். சிறப்பாக இதை இரவில் கட்டுவது நல்லது.
 • சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுக சூரணத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும். 5 கிராம் சூரணம்+10 மி.லி. வெற்றிலைச்சாறு தேன் 10 கிராம் கலந்து காலை, மாலை நோயிக்குத் தக்க வாறு 48-96 நாள் சாப்பிட வேண்டும்.
 • குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்பால் அதிகமாகச்சுரக்கும்.
 • வெற்றிலைச் சாறு நான்கு துளி காதில் விட எழுச்சியினால் வரும் வலி குணமாகும்.
 • விடாது மூக்கில் ஒழுகும் சளிக்கும் வெற்றிலைச்சாற்றை மூக்கில் விட குணமாகும்.
 • ஒரிசாவில் சில பகுதிகளில் பெண்கள் குழந்தைகள் பிறக்காமல் தடுக்க 10 கிராம் வெற்றிலை வேரையும், மிளகையும் சம அளவு வைத்து அரைத்து 20-40 நாட்கள் சாப்பிட்டு வருகிறார்கள்.
 • வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலுட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
 • நுரையீரல் சம்பந்தமான நோய்களிக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்மடும்.
 • சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம்.
Read more »

நோயின்ற வாழ நடைப்பயிற்சி

Monday, January 25, 2010 32 comments

நாம் உண்ணும் உணவுப்பழக்க வழக்கங்களினால் மிக சிறிய வயதில் உடல் பருமண், இரத்தக் கொதிப்பு, சர்க்கரை, நீரழிவு நோய் என்று கேள்விப்படாத நோய்கள் எல்லாம் வருகின்றன. எந்த மருத்துவரிடம் சென்றாலும் அவர் மாத்திரை மருந்து என நிறைய செலவு வைத்துவிட்டு கடைசியாக சொல்வது நடைப்பயிற்சி செய்யுங்கள். நடைப்பயிற்சி இன்று அந்த அளவிற்கு முக்கியமாகிவிட்டது.

நான் சென்னையில் இருக்கும் போது காலை வேலையில் கடற்கரைப் பக்கம் சென்றால் ஒரு திருவிழாப் போல் இருக்கும் அங்கு எல்லோரும் கையை வீசிக்கொண்டு வேகமாக நடக்கின்றனர். அங்கு மட்டுமா? எல்லா இடங்களிலும் நாற்பது வயதிற்கு மேற்பட்டோர் தான் அதிகம் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இன்று வரும் புதுப்புது நோய்களால் 20 வயதிற்குட்பட்ட நிறைய பேர் நடைபயிற்சியல் ஈடுபடுகின்றனர். நோயின்றி வாழ நடைப்பயிற்சி அவசியமான ஒன்றாகிவிட்டது இன்று.

நடைப்பயிற்சி:
கீழ் காணும் முறையில் நடந்தால் நடைப்பயிற்சியின் முழுப்பயனையும் பெறலாம். 
1. நெஞ்சை நிமிர்த்தி முன்னோக்கிப் பார்த்தவராக (தரையை பார்க்காமல்) இருபது அடி முன்னோக்கியவாறு நடங்கள்.
2. நெஞ்சை உயர்த்தியவாறு தோள்களைச் சாதாரணமாகவும் கைகளைத் தளர்வாகவும் வைத்திருங்கள்.
3. கைகளை முன்னும் பின்னும் ஒரே சீராக ஆட்டியவாறு (பக்கவாட்டில் ஆட்டாமல்), அதேவேளை நெஞ்சுப் பகுதியை விட உயர்த்திவிடாமல் நடந்து செல்லுங்கள். அதற்கேற்றவாறு உங்கள் கால்களும் பின் தொடரும்..
4. உங்கள் அடி வயிற்றை கெட்டியாகவும் உறுதியாகவும் வைத்த நிலையில் முதுகை சமமாக நிமிர்த்தியவாறு உடலைச் சற்றே முன்புறம் சாய்த்தவாறு நடங்கள்.
5. ஒரு நேர்கோட்டில் நடப்பதை போல் பாவனை செய்யுங்கள். அடிகளை சற்று அதிகமாக எட்டி வைத்து நடப்பதைக் கட்டுப்படுத்துங்கள். வேகமாக செல்ல வேண்டுமானால், காலடிகளை அருகருகே வைத்து விரைவாக நடங்கள்.
6. நடக்க காலை உயர்த்தும் போது உங்கள் முன்னங்கால் விரல்களால் உடலை உந்தித் தள்ளியவாறும், காலை பூமியில் வைக்கும் போது குதிகாலை பூமியில் முதலில் பதிய வைத்தவாறும் இதே சுழற்சியாக முன்னங்கால் விரல்களையும் இயற்கையான ஸ்ப்ரிங் போன்ற நரம்புகளின் உதவியால் உடலை முன்னோக்கி செலுத்துங்கள்.
7. இயல்பாக சுவாசியுங்கள். நடக்கும் போது ஆழமாக ஒரே சீரான வேகத்தில் சுவாசித்து உயிர்வளி (Oxygen) அதிகமான அளவில் உட்செலுத்திக்கொள்ளுங்கள். நடக்கும் போது வேகமாகவும் அதே நேரத்தில் மூச்சிறைக்கும் அளவிற்குல்லாமலும் பார்த்துக் கொள்ளுங்கள்.

நடைப்பயிற்சியின் வகைகள்:
நடைப்பயிற்சில மூணு வகை உண்டு. முதல் வகை மெதுவாக நடக்கிறது. நாம எப்பவும் நடக்கிற மாதிரி எந்த ஒரு வேகமும் சிரமமும் இல்லாம சாதாரணமா நடக்கிறது இந்த வகை.
உடல்வலிகளை, சோர்வுகளைப் போக்க இந்தவித நடை உதவறதோட, உடம்புல உள்ள தசைகளையும், எலும்பு இணைப்புகளையும் இதமாக்கி, காயங்கள் வராமலும் பாதுகாக்கும். உடல் பருமன் உள்ளவங்களுக்கு ஏற்ற நடை இது.
அடுத்து பவர் வாக்கிங்னு சொல்ற வேக நடை. கைகளையும் கால்களையும் வேகமா வீசி நடக்கிறது. இப்படி வேகமா நடக்கிறப்ப, உடம்புல உள்ள கழிவுகள் எரிக்கப்படும்.
வியர்வை அதிகம் வெளியேறி, உடம்பு சுத்தமாகும். தசைகளும் எலும்புகளும் அதிக வலுவைப் பெற்று, தன்னம்பிக்கையை உயர்த்தி, உடம்புக்கு அதிக சக்தியைக் கொடுக்கும் இந்த நடை. நீரிழிவுக்காரர்களுக்கு ஏற்ற நடை இது.
மூணாவது ஜாகிங்னு சொல்ற மெதுவான ஓட்டம். வேகமா நடக்கிறவங்க, சில மாசங்களுக்குப் பிறகு வேகத்தைக் கொஞ்சம் கூட்டும்போது மிதமான, மிகமிக மெதுவான ஓட்டமா அது மாறும். இதனால நிறைய ஆக்சிஜன் நுரையீரலுக்குள்ள போய், அதன் விளைவா இதயத்துக்கு அதிக சுத்த ரத்தத்தை அனுப்பி, தேவையில்லாத அத்தனை கழிவுப் பொருள்களையும் வெளியேற்றி, உடம்புல உள்ள ஒவ்வொரு அணுவையும் சுத்தம் செய்யும்.
இள வயதுக்காரங்களுக்கு ஏற்ற நடை இது. தினமும் அரை மணி நேரத்து லேர்ந்து 1 மணி நேரம் வரை நடக்கலாம். இளவயசுக்காரங்க 1 மணி நேரமும், 30&40 வயசுக்காரங்க 45 நிமிடங்களும், 40 ப்ளஸ்ல உள்ளவங்க அரை மணி நேரமும், 50&60 வயசுக்காரங்க 20 நிமிடங்களும் நடக்கலாம்.

எப்ப நடக்கலாம்:
அதிகாலைல நடக்கிறது நல்லது. அது முடியாதவங்க ராத்திரி சாப்பாட்டுக்கு அரை மணி நேரத்துக்குப் பிறகு நடக்கலாம். நடக்க ஆரம்பிச்ச புதுசுல, சிலருக்கு கஷ்டமா இருக்கலாம். முதல்ல வாரத்துக்கு இரண்டு முறை நடந்து, அப்புறம் தினசரி நடக்க உடலை தயார்படுத்தலாம்.

நடைப்பயிற்சி தொடங்கும் முன்:
 • எக்காரணம் கொண்டும் வெறும் வயித்துல நடக்கக் கூடாது.
 • அதிகாலைல நடக்கிறவங்க, அதுக்கு முன்னாடி அரை லிட்டர் தண்ணீர் குடிச்சிட்டு நடக்க ஆரம்பிக்கலாம். 
 • உடற்பயிற்சி துவக்கமாக ஒரே வேகத்தில் சுமார் 5 நிமிடங்கள் நடந்து பின்னர் கைகால்களை நீட்டவும். இதன்மூலம் நரம்புகளில் ஏதும் சோர்வோ அல்லது வீக்கமோ ஏற்படுவதிலிருந்து காத்துக்கொள்ளலாம்.

நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடம்:
நன்கு பரிச்சயமான பாதுகாப்பான மற்றும் மனித நடமாட்டம் உள்ள பகுதியை தேர்ந்தெடுத்து நடக்கத்துவங்குங்கள். திடீரென்று உடல் நலமில்லாமல் ஆனாலோ அசதி, அல்லது களைப்பு ஏற்பட்டாலோ வழியை தவறவிட்டு மேலும் சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்க இது உதவும். 
பொது மக்கள் இளைப்பாறும் பூங்காக்கள், மைதானங்கள் மற்றும் கடைத்தெருக்கள் அருங்காட்சியகங்கள் போன்றவை ஆரம்ப காலத்தினருக்கு சிறந்த நடக்கும் இடங்களாகும். சற்று திடமான மற்றும் ஆரோக்கியமானவர்கள் பெரிய மைதானங்கள் மற்றும் இயற்கையான காட்சிகள் நிறைந்த சோலைகள் நடைபாதைகள் என்று பல விதமான இடங்களினை தேர்வு செய்ய வாய்ப்புகள் உள்ளன. ஆயினும் அந்த இடத்தை பற்றிய முழுமையான விபரங்கள் அறிந்திருப்பதும் பாதைகளை விவரிக்கும் வரைபடங்கள் போன்ற சாதனங்கள் வைத்திருப்பதும் அவற்றை முறையாகப் பயன்படுத்த அறிந்திருப்பதும் நல்லது.

தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் பயன்கள்:
 • இரத்த ஓட்டம் சீரடையும் 
 • நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும் 
 • நாளமில்லா சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறும்.
 • அதிகப்படியான கலோரிகளை (Calories ) எரிக்க உதவுகிறது
 • முதுகு நரம்புகளை உறுதியாக்குகிறது
 • அடிவயிற்றுத் தொப்பையைக் குறைக்கிறது
 • மூட்டுக்களை இலகுவாக்குகிறது
 • எலும்புகளுக்கு உறுதியளிக்கிறது
 • உங்கள் கால்களையும் உடலையும் உறுதியான அமைப்பில் வைக்கிறது
 • கெட்ட கொழுப்புச்சத்தின் (Cholestrol) அளவை குறைக்கிறது
 • மாரடைப்பு சர்க்கரை நோய் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கிறது
 • உடல் மற்றும் மனச்சோர்வை குறைக்கிறது
 • நல்ல தூக்கம் வர உதவுகிறது
 • நல்ல கண்பார்வையை வழங்குகிறது
முறையாக நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் நலமாக வாழலாம். வீண் மருத்துவச் செலவை தவிர்க்கலாம் முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் நடைப்பயிற்சி தினமும் 40 நிமிடங்கள் செய்தால் கூட போதுமானது.
Read more »

சாலையோரம் தொடர்....

Saturday, January 23, 2010 29 comments

சாலையோரம் தொடர் இடுக்கைக்கு என்னை அழைத்த தீபாவிற்கு நன்றி. சாலையோரத்தைப்பற்றி நமது சக பதிவர்கள் எல்லாம் அழகாக எழுதி இருந்தார்கள். அவர்களின் அனுபவம் இனிமையாக இருந்தது.

முதன் முதலாக ஓட்டிய மிதிவண்டி
நான் ஐந்தாம் வகுப்பு படித்த சமத்தில் எங்கள் ஊரில் இருந்த மிகப்பெரிய மிதிவண்டி நிலையம் (10 மிதிவண்டி வாடகைக்கு கொடுக்க) இருந்தது. அங்கு சிறுவர்களுக்கான மிதிவண்டி 1 மணி நேரத்திற்கு 50 பைசா வாடகையில் முதலில் ஓட்டிப்பழகினேன். எங்கள் ஊரில் மைதானம் இருந்ததால் சாலைக்கு வராமல் அங்கேயே விழுந்து புரண்டு ஓட்டிவிட்டேன். நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது மிதிவண்டி ஒன்று எங்க அப்பாவிற்கு அடமானத்திற்கு வந்தது அந்த மிதிவண்டியை என்னிடம் கொடுத்து ஓட்டிப்பழகு என்றார்.

குரங்குப்பெடல்
மிதிவண்டியில் என் நண்பன் பரந்தாமன் குரங்குப்பெடல் ஓட்டிக்காண்பித்து இப்படி ஓட்டு என்றான். குரங்குப்பெடல் என்றால் மிதிவண்டியின் தண்டிற்கு கீழ் காலை உள்ளே விட்டு ஒரு கையில் ஹேண்டில்பாரை பிடித்துக் கொண்டு ஓட்ட வேண்டும் ஒரு வழியாக குரங்குப்பெடல் ஓட்டிப் பழகினேன். கொஞ்ச நாட்களில் நண்பனின் உதவியுடன் மிதிவண்டி ஓட்டிப்பழகினேன். வீட்டில் புது வண்டி வாங்கச் சொல்லி அழுது புரண்டேன் ஆனால் மசியவில்லை இதுதான் உனக்கு வண்டி என்று சொல்லிவிட்டார்கள்.

எனது காதல் வாகனம்
வண்டியை அழகாக்கி எனது பெயர் எழுதி கம்பிகளில் கலர் பூக்கள் கைப்பிடியில் பூ போல் தொங்கும் கைப்பிடி என்று அப்பா சட்டையில் தினமும் 1 ருபாய் திருடி எனது மிதிவண்டியை அழகாக்கினேன். நான் 9 மற்றும் 10வது படிக்கும் போது விடுதியில் இருந்ததால் எனக்கு டியூசன் செல்ல மிதிவண்டி தேவைப்பட்டது எனது காதல் வாகனத்தை விடுதிக்கு கொண்டு சென்றேன். கோபியில் விடுதி விடுமுறை நாட்களில் பாரியூர் கோயிலுக்கு மிதிவண்டியில் தான் செல்வோம் அனைவரும் போட்டி போட்டு வேகமாக செல்வோம் இதில் நானும் சம்பத் என்ற நண்பனும் கடைசியாகத்தான் வருவோம் மெதுவாக ஓட்டினால் தான் பொண்ணுங்களை சைட் அடித்து விட்டு அப்படியே பராக் பார்த்துவிட்டு ஓட்டலாம். அப்படியே பவளமலை சென்று முருகனை தரிசிப்போம். முருகனை தரிசிப்போம் என்ற பேரில் அங்கு வரும் எஞ்சோட்டுப் பெண்களை தரிசிப்போம். ஒரு நாள் பவளமலையில் இருந்து வரும் போது ஒரு திருப்பத்தில் வேகமாக வரும் போது என்னால் சரியாக திருப்ப முடியவில்லை அப்புறம் வந்த வேகத்தில் திருப்பத்தில் இருந்த கல் மேல் அடித்து நான் மலையில் இருந்து ஒரு பக்கம் உருள அந்தப்பக்கம் என் சைக்கிள் உருள அடுத்த வளைவிற்கு கொஞ்சம் மேல் விழுந்து கிடந்தேன். மற்ற நண்பர்கள் வேகமாக சென்றதால் சம்பத் மட்டும் என்னையும் என் மிதிவண்டியையும் தூக்கினான். முதன் முதலாக நான் கீழே விழுந்து அடிபட்டது எனது காதல் வாகனமும் செலவு வைத்து விட்டது.
அன்று முதல் இன்று வரை வாகனத்தை எடுத்தால் வேகமாக செல்வதை குறைத்துக்கொண்டேன் அதிகபட்சம் 60கிலோ மீட்டர் வேகத்தில் செல்வேன்.

முதல் இருசக்கர வாகனம்

நான் முதன் முதலில் இரு சக்கர வாகனம் ஓட்டியது நான் 10ம் வகுப்பு படிக்கும் போது எனது மாமா அப்போது மிகவும் பிரபலமான யமாகா வாங்கி இருந்தார். அவ்வாகனத்ைத்தான் நான் ஓட்டி பழகிய இருசக்கர வாகனம். எப்ப மாமா வீட்டிற்கு செல்வோம் வண்டி ஓட்டலாம் என காத்து இருப்பேன். நன்றாக வண்டி ஓட்டி பழகியது அப்போது தான். யமாகா மேல் இருந்த காதலால் ஒரு ஒன்றரை வருடத்திற்கு முன் நானும் யமாகா கிளாடியேட்டர் வாகனத்தை வாங்கி ஓட்டி வருகிறேன்.

விபத்து
முதல் விபத்து 10வது படிக்கும் போது நடந்தது அப்போது எனக்கு அடி அந்த அளவிற்கு இல்லை. இரண்டாவதாக நான் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் போது நான் எனது நண்பர்கள் வசந்த், கண்ணன் மூவரும் கள் குடிக்க பக்கத்து கிராமத்துக்குச் சென்றோம் மூன்று பேரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்று குடித்தோம் அங்கு கள் பத்தவில்லை என்று குருவரெட்டியூர் என்ற ஊரிற்கு பக்கத்தில் கிடைக்கும் என்று சொன்னார்கள் அங்கு சென்று ஆளுக்கு 5 டம்ளர் குடித்து விட்டு திரும்பி வரும் போது ஒரு இடத்தில் சிற்றாறுக்கு பாலம் அமைக்கும் வேலை நடப்பதால் பாலத்திற்கான குழி வெட்டி இருந்தார்கள் அந்த இடத்தில் டேக் டைவர்சன் அட்டை இல்லை கொஞ்சம் மப்பில் நண்பன் கண்ணன் ஓட்ட அடுத்து நான் எனக்குப் பின் வசந்த் நண்பன் வேகமாக ஓட்ட நேராக வண்டி குழி இருக்கும் இடத்தில் விட பாலத்திற்காக செங்கல், கல் மணல் கொட்டி இருந்தார்கள் வண்டி செங்கள் மீது மோதி தூக்கி எரிந்தது மூவரும் சிற்றாரில் விழ மற்ற இருவரும் அதிஷ்டவசமாக தண்ணீரில் விழ நான் மட்டும் பாறையின் ஓரத்தில் விழுந்து கை முறிந்தது.
அன்று முதல் ஒன்றரை வருடத்திற்கு முன் வரை குடித்ததால் வண்டி ஓட்டுவதில்லை.


சாலை விதிகள்
சாலை விதிகள் தெரியாது அதனால் முன்பொல்லாம் மீறினேன் இப்பொழுது தெரிந்து கொண்டேன் அதனால் சாலை விதிகளை மீறுவதில்லை. வாகனங்கள் ஓட்டும் போது கவனிக்க வேண்டிய சில குறிப்புகள்

1. நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் செல்லுங்கள்
2. தலைக்கவசம் கண்டிப்பாக அணியுங்கள்
3. மது அருந்திவிட்டு கண்டிப்பாக ஓட்டாதீர்கள்
4. கை பேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டாதீர்கள்
5. திருப்பங்களில் இண்டிகேட்டர் பயன்படுத்துங்கள்
6. வாகனங்களில் பின்வருபவர்களை பார்க்க கண்ணாடி கண்டிப்பாக பொறுத்துங்கள்
7. வலைவில் முந்தாதீர்
8. மலைப்பகுதியில் செல்லும் போது மேலே செல்லுபவர்களுக்கு வழி விட்டு செல்லுங்கள்
9. காரில் செல்லும் போது சீட் பெல்ட் அணியுங்கள்
10. வாகனம் ஓட்டும் போது கவனத்தை சிதறவிடாதீர்கள் (பராக் பார்த்து விட்டு ஓட்டாதீங்க)

இவை எல்லாம் எல்லாருக்கும் தெரியும் ஆனால் காவலர்களை பார்க்கும் போது மட்டும் பயன்படுத்துவது மற்ற நேரங்களில் நமது மக்கள் பயன் படுத்துவதில்லை.
Read more »

தலையில் பொடுகா? கவலைப்படாதீர்கள்...

Thursday, January 21, 2010 40 comments

 
கூந்தலைப் பற்றி பல காப்பியங்களிலும், இதிகாசங் களிலும் அதிகம் காணப்படுகிறது. நீண்ட தலைமுடியை கூந்தல் என அழைக்கிறோம். நீண்ட கூந்தலை விரும்பாத பெண்கள் எவரும் இருக்க முடியாது. நம் முன்னோர்களில் ஆண்களும், பெண்களும் பாரபட்சமின்றி கூந்தல் வளர்த்தனர். நாகரிகம் வளர வளர இன்று பெண்கள் கூட கூந்தலை கத்தரித்துவிட்டு மிகக் குறைந்த அளவே முடிவைத்துக் கொண்டுள்ளனர்.

இன்றைய நவீன இரசாயனம் கலந்த உணவுகள் மற்றும் பருவ மாற்றங்களால் நீண்ட கூந்தல் என்பது சில பெண்களுக்கு கனவாக அமைந்துவிடுகிறது.கூந்தலை வளர்ப்பது பெரிதல்ல... அதை பராமரிப்பதுதான் மிகவும் கஷ்டமான விஷயம். சிலர் முடி உதிர்வதால் பெரிதும் மனவேதனைக்கு ஆளாகியிருக்கின்றனர். பகட்டு விளம்பரங்களில் வரும் இரசாயனக் கலவையான ஷாம்புகளை பயன்படுத்தி சிலர் மேலும் முடிகளை இழக்கின்றனர்.
முடி உதிர்வதைத் தடுக்கவும், நீண்ட நெடிய கூந்தலைப் பெற பொடுகின் தொல்லை இல்லாமல் இருப்பது அவசியம். பொடுகினால்தான் அநேக பேருக்கு முடி உதிர்கிறது.

தலையில் அரிப்பு இருந்தாலே பொடுகு இருக்கிறது என்று உணர்ந்துகொள்ளலாம்.

பொடுகு எவ்வாறு உண்டாகிறது:
பொடுகு என்பது ஒருவகை நுண்ணிய காரணிகளால் தலையில் உண்டாகும் நோய். இந்த நோய் தாக்கினால் தலையில் அரிப்பு ஏற்படும். அந்த அரிப்பு உள்ள இடத்தை சொரிந்தால் தவிடு போல் தலையிலிருந்து உதிரும். பின் அரிப்பானது தலை முழுவதும் பரவி சொரியச் செய்துவிடும். அந்த இடங்கள் வெண்மையாய் சாம்பல் பூத்தது போல் தோன்றி முடி உதிர ஆரம்பிக்கும்.
சிலருக்கு இந்நோயின் தாக்கம் புருவத்திலும் ஏற்படுவதுண்டு. தலையை சொரிந்த கையால் பிற இடங்களையும் சொரிந்தால் அங்கு இந்நோய் பரவும் (குறிப்பாக காதில் கதவும்) இது உடலில் தேவையான அளவு எண்ணெய் பசை இல்லாததால் உண்டாவதாகும். 


சருமத்தின் இறந்த உயிரணுக்களின் அதிக உற்பத்திதான் டேன்ட்ரஃப் என்று அழைக்கப்படும் தலைப்பொடுகாகும். தலையின் மேற்புறத்திலிருந்து இறந்த உயிரணுக்கள் மிக வேகமாக உதிர்வது என்றும் இதைக் கூறலாம்.
பொடுகு என்பது தலையின் மேற்புறத்தில் சாதாரணமாக வளரும் சரும உயிரணுக்களின் விளைவாகும். இது நம் தலையின் மேற்புறமும், ஏன் உடல் முழுதுமே சரும உயிரணுக்களால் நிறைந்தது. சருமம் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும்போது, பழைய செல்களின் லேயர்கள் இறந்து உதிரத் தொடங்குகிறது.
சில சந்தர்ப்பங்களில் செல்கள் அதிகமாக பெருகுவதால், இறந்த செல்கள் டேன்ட்ரஃப் என்ற பொடுகு வடிவம் அடைகிறது.பொடுகு எந்த வயதினருக்கும், எக்காலத்திலும் ஏற்படலாம். நீண்ட நாளைய பொடுகு மூக்கு, கண்கள், காதுகள் மற்றும் மார்புப் பகுதிகளில் உள்ள சருமத்தையும் பாதிப்படையச் செய்யும் வாய்ப்புகள் அதிகம்.பொடுகு வராமல் தடுக்க
 * பொடுகவராம‌லதடு‌க்ம‌ற்றவ‌ரபய‌ன்படு‌த்‌திய ‌சீ‌ப்பபய‌ன்படு‌த்துவதை‌தத‌வி‌ர்‌க்கவு‌ம்.
* வாரம் இருமுறை எண்ணெய்த் தேய்த்துக் குளிக்க வேண்டும். தலையதூ‌ய்மையாவை‌த்து‌ககொ‌ள்வே‌ண்டு‌ம்.
 * நெய், பால், வெண்ணெய் முத‌லிய உணவுகளை ‌சி‌றிது உண‌வி‌ல் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.
 * இந்தக் கொழுப்பு சத்துள்ள உணவுகளால் தோலுக்குத் தேவையான எண்ணெய்ப் பசை கிடைக்கிறது. இதனால் பொடுகு கிருமிகளின் தாக்கத்திலிருந்து முடியைக் காப்பாற்றலாம்.

பொடுகை அழிக்க
 *மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.

*வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும்.

*தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல் லது சீயக்காய் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.

*வேப்பிலை கொழுந்து, துளசி ஆகியவற்றை நைசாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

*வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறைந்து போகும்.

* எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.

*தலைக்கு குளிக்கும் போது, கடைசியாக குளிக்கும் தண்ணீரில், வினிகர் கலந்து குளித்தால், பொடுகு நீங்கும்.

*நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர பொடுகு நீங்கும்.

*வாரம் ஒரு முறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகு தொல்லை நீங்கும்.
 
*தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்னை நீங்கும்.

*தேங்காய் பால் எடுத்த பின் கையை தலையில் நன்றாகத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு, மறைந்து விடும்.

*முதல்நாள் சாதம் வடித்த தண்ணீரை எடுத்து வைத்து, மறுநாள் அதை தலையில் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.

*தயிர், முட்டை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும்.

*துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.


இத்தனை குறிப்புகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பொடுகை நீக்கி அழகான நீண்ட கூந்தலைப் பெறலாம்.
Read more »

நலமாய் வாழ மாதுளையின் பங்கு

Tuesday, January 19, 2010 44 comments

மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.
புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.
மாதுளம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்:
 • தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும்.
 • தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.
 • ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.
 • மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும்.
 • அதிக தாகத்தைப் போக்கும்.
 • மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.
 • மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும்.
 • மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.
 • வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.
 • பித்த சம்மந்தமான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.


மாதுளம்பழம் பூவின் பயன்கள்:
 • மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.
 • மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.
 • மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.
 • மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.
 • மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.
மாதுளம்பழத் தோலின் பயன்கள்:
மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.


Read more »

நடிகர் சூர்யாவின் அகரம் & விதை

Monday, January 18, 2010 28 comments

இந்த பொங்கல் விடுமுறையில் நான் மிகவும் ரசித்து பார்த்த என்னை கண்கலங்க வைத்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி விஜய் டிவியில் பொங்கலன்று காலை ஒளிபரப்பாகிய சூர்யாவின் ஒரு கோடி ஒரு தொடக்கம் நிகழ்ச்சி.
நான் படிக்கும் காலத்தில் 90 சதவீதம் மதிப்பெண் எடுக்கும் மாணவன் இல்லை. தோராயமாக 65 சதவீதம் மதிப்பெண் எடுக்கும் மாணவன் தான் ஆனால் மிகவும் பின் தங்கிய கிராமத்தில் பிறந்த எனக்கு மேலே என்ன படிக்கலாம் என்று சொல்ல அப்பாவிற்கு நண்பரோ அல்லது ஊரில் நன்கு படித்த நண்பர்களோ யாரும் எனக்கும் இல்லை அப்பாவிற்கும் இல்லை. பக்கத்து ஊரில் இருக்கும் படித்தவர்கள் வெளியில் வேலை செய்கிறார்கள் நாம் எங்கே தேடி செல்வது. அந்த கால கட்டங்களில் நாம் இந்தப் பாடம் படித்தால் இந்த வேலைக்கு செல்லாம் என்று தெரியவில்லை எனக்கு தெரிந்ததெல்லாம் கல்லூரிக்குச் செல்லவேண்டும் பேருந்தில் படிக்கட்டில் செல்லவேண்டும் இது தான்.
பள்ளி இறுதி ஆண்டு முடிக்கும் போது தான் கணினி படிப்பு படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்று கல்லூரி வாசலில் கேள்விப்பட்டு அதற்கு விண்ணப்பம் வாங்கலாம் என்று கேட்டால் நீங்க படித்தது வணிகவியல் நீங்க எல்லாம் கணினி படிப்பிற்கு ஏற்றவர்கள் இல்லை. சரி என்ன செய்வது எனது அன்றைய நிலை கல்லூரி செல்ல வேண்டும் எதாவது படிக்க வேண்டும் சரி இளங்கலை வணிகவியல் தான் கிடைத்தது அதை படித்தேன்.

என்னைப்போல் எங்க கிராமத்து நண்பர்களும் வணிகவியலே படித்தோம் அப்போது தெரியவில்லை என்ன செய்வது என்று. ஆனால் இப்போது 10ம் வகுப்பு முடிக்கும் போது நானும் எனது நண்பர்களும் எங்க கிராமத்து எங்கள் தம்பிகளுக்கெல்லாம் இதை படி இந்த வேலை கிடைக்கும் மற்றும் எந்நதக் கல்லூரியில் என்ன படிக்கலாம் என்று இன்று சொல்கிறோம். எங்களுக்குத் தேவை எல்லாம் அனைவரும் கல்வி கற்க வேண்டும் எங்களால் முடிந்தது எதைப் படிக்கலாம் எங்கு படிக்கலாம், கவுன்சிலிங் போவது எப்படி, அதற்கு எங்கு விண்ணப்பம் வாங்கலாம் என்று மட்டுமே சொல்ல முடியும் அவர்களுக்கு பண உதவி செய்ய இயலாது காரணம் எனது வருமானம் எனது குடும்பத்திற்கே சரியாக உள்ளது.
நன்கு படிக்கும் மாணவர்களுக்கு பணம் இருக்காது, பணம் இருக்கும் மாணவனுக்கு படிப்பு இருக்காது. நான் 65 சதவீதம் மதிப்பெண்தான் எடுத்தேன் என் நண்பன் 50 சதவீதம் தான் எடுத்தான் அவனது அப்பா 15 ஆயிரம் பணம் கட்டி அவனை ஆசிரியர் பயிற்சியில் சேர்த்தார் இன்று அவன் தலைமை ஆசிரியர் நல்ல சம்பளம். இது தான் இன்றைய நிலை.
என்னைப் பொருத்தவரை தானம் நிறைய வகையில் செல்லலாம் ஆனால் வாழ்வில் அடிப்படை வசதி இல்லாத மாணவர்களுக்கு நம்மால் முடிந்த வரை கல்வி கற்க உதவுவது தான் மிகப்பெரிய தானம் என்று சொல்வேன் இதை தான் சூர்யா செய்கிறார்.
பொங்கலன்று இந்நிகழ்ச்சியை பார்கும் போது 1133 மதிப்பெண் எடுத்த மாணவன் படிக்க வசதி இல்லை ஆயிரம் மதிப்பெண்ணிற்கு மேல் படித்த பெண்ணிற்கு உடுத்த துணி இல்லை இப்படி அங்கு இருந்த மாணவர்கள் எல்லாம் சொல்வதைக் கேட்டு எங்க வீட்டில் அனைவருக்கும் கண்கலங்கியது. அப்போது சூர்யா சொன்னார் உங்களுடன் அகரம் இருக்கும் என்று.
சூர்யாவின் தந்தை சிவக்குமார் அகரம் என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார். அவர்களை தொடர்பு கொண்டு நல்ல மதிப்பபெண் உள்ளவர்களை மேற்படிப்பு படிக்க வைக்கிறார்கள் அற்புதமான விசயம் நிச்சயம் 1 கோடி பேரில் ஒருத்தருக்குத்தான் இந்த மனசு வரும். இன்று தான் அவர்களது வலைத்தளத்தைப் பார்த்தேன். சூர்யா விதை என்று புதிய அமைப்பைத் தொடங்கி தந்தை எட்டடி பாய்ந்தால் மகன் 16 அடி பாய்வான் என்ற இப்பழமொழிக்கு ஏற்ப சூர்யா தமக்கு நெருங்கிய 10 பேரைக் கொண்டு ஒவ்வொருவரும் தலா 10 லட்சம் போட்டு 1 கோடி ரூபாய் மூலதனமாகக் கொண்டு 100 பேரை தேர்ந்தெடுத்து வரும் ஜீன் மாதம் முதல் படிக்க வைக்கிறோம் என்றார்.
அதே நிகழ்ச்சியில் எல்லோரிடமும் காசோலை வாங்கி இது உங்கள் பணம் நீங்க நல்லா மதிப்பெண் வாங்குங்க படிக்க வைக்க நாங்கள் இருக்கின்றோம் என்றார். சூர்யாவிற்கும் அவரது இந்த கல்விப் பணிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். மனது நெகிழ்ந்தது எனக்கு மட்டுமல்ல என் குடும்ப நண்பர்கள் அனைவருக்கும் இந்நிகழ்ச்சியை பார்த்ததில் இருந்து நான் இப்படி ஒரு அமைப்பு இருக்கிறது நல்ல மதிப்பெண் எடுத்தால் அகரம் என்று நடிகர் சூர்யா நடத்தி வருகிறார் நீ மதிப்பெண் எடு அவரை தொடர்பு கொள்ள அவரது வலைத்தளத்தில் முகவரி கொடுத்து உள்ளார் என கூறிவருகிறேன் வலையுலக சகோதர, சகோதரிகளே நீங்களும் இவ்வலைத்தளத்தை பாருங்கள் http://agaram.in உங்களுக்கு தெரிந்த ஏழை மாணவனை தொடர்பு கொள்ள சொல்லுங்கள்.
என்னிடம் ஏழை மாணவர்களை படிக்க வைக்க பணம் இல்லை ஆனால் அவர்களுக்கு அகரம் போல் உள்ள தன்னார்வ நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று இருக்கிறேன் இதற்காக எனது நண்பர்கள் மூலம் ஒரு அமைப்பை ஏற்படுத்தி தகுதி உள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு என்னாலும் எனது நண்பர்களாளும் முயன்ற உதவிகளை செய்யலாம் என்று இருக்கிறேன் வருகிற மே மாதத்திற்குள் அமைப்பை பலப்படுத்த என்னி இருக்கிறேன்.
வலையுலக நண்பர்களே உங்கள் அனைவரையும் இவ்வமைப்பிற்கு வரவேற்கிறேன். நீங்களும் இவ் அமைப்பில் இணைந்து உங்கள் ஊரில் உள்ள ஏழை மாணவனின் கல்வி கணவை நனவாக்க வாருங்கள் என உங்களை அன்புடன் வரவேற்கிறேன். இவ் அமைப்பிற்கான பெயர், இந்த அமைப்பு என்ன என்ன செய்ய வேண்டும், அமைப்பை எவ்வாறு தொடங்க வேண்டும், எப்படி பதிவு செய்ய வேண்டும் என என் அரிமா சங்க நண்பரை கேட்டு உள்ளேன் நீங்களும் உங்கள் அறிவுரைகளை கூறுமாறு வேண்டுகிறேன். அடுத்த மாத தொடக்கத்தில் இவ் அமைப்பிற்கான முழுப்பதிவை வெளியிட முயற்சிகள் மேற்கொண்டு உள்ளேன். வலையுலக நண்பர்களே உங்கள் அறிவுரையை கூறுங்கள் நீங்களும் வாருங்கள் நாம் ஒன்று பட்டால் உண்டு ஒரு ஏழைமாணவனக்கு கல்வி.
Read more »

பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல்

Tuesday, January 12, 2010 25 comments

தமிழனின் பாரம்பரியமிக்க திருவிழா தான் பொங்கல் திருவிழா. இத் திருவிழா சங்க காலத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. மார்கழி கடைசி நாளன்று போகிப்பண்டிகையாகவும், தை முதல் நாள் தான் தமிழனின் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் திருநாள், அடுத்த நாள் உழவர் திருநாள், மூன்றாம் நாள் காணும் பொங்கல் என்று கொண்டாடுவர்.
பொங்கல் :
முன் காலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது.

பொங்கல் எவ்வாறு வைப்பது :
பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள் சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.


மாட்டுப்பொங்கல்:
தைப் பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்கலை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.
அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி  குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.
உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.
தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.

காணும் பொங்கல் :
என்பது  பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.
இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.
இப்பொங்கல் திருநாளை கொண்டாட நான் எனது கிராமத்திற்குச் செல்கிறேன் மீண்டும் உங்களை எல்லாம் 18ம் தேதி சந்திக்கிறேன்..
எனது  சகோதர, சகோதரிகளாகிய உங்களுக்கும் 
உங்கள் குடும்பத்தாருக்கும் 
என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் !!!
Read more »

போகிப்பண்டிகை - பழையன கழிதலும் புதியன புகுதலும்

Sunday, January 10, 2010 30 comments

பழையன கழிதலும் புதியன புகுதலும் இது தான் போகிப்பண்டிகை என்று அனைவரும் சொல்லும் வாசகம். கிராமங்களில் போகிப்பண்டிகை அன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சந்தோசம் தான் தங்கள் வீட்டில் இருக்கும் பழைய விரிப்பு, பெட்சீட், தலையானை மற்றும் இதர பொருட்களை தீ இட்டு ஆடிப்பாடி மகிழ்வர். நான் சிறியவனாக இருக்கும் போது எங்கள் ஊரில் பெண்கள் எல்லாம் கும்மியடித்து, கும்மிப்பாட்டு பாடி அனைவருக்கும் மகிழ்வர். இப்ப எல்லாம்  அதைப்பார்த்து 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையில் போகிக்கு முக்கிய இடம் உண்டு.

இப்பண்டிகை எப்பவுமே தை பொங்கலுக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை உணர்த்தும் வகையில் போகிப்பண்டிகை அன்று வீட்டை கழுவி சுத்தப்படுத்தி குப்பைகளை போட்டு தீயிட்டு கொளுத்துவர். வீட்டில் உள்ள பழைய குப்பைகள், துணிகளைத்தான் வழக்கமாக கொளுத்துவார்கள்.

மார்கழி மாதத்தின் கடைசி நாளை துன்பங்களைத் துடைக்கும் நாளாக போகிப்பண்டிகை என்ற பெயரில் கொண்டாடுகிறோம். துன்பம், வறுமை, மனஅழுக்கு போன்ற குப்பைகளை எரித்து புதுப்பொலிவுடன் பொங்கலைக் கொண்டாட நம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் பண்டிகை இது பண்டைய நாட்களில் மழையைக் கொடுத்து பயிர்களை செழிக்க வைக்கும் இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்திர விழாவாக போகிப்பண்டிகை கொண்டாடப்பட்டது. சொர்க்க போகங்களை அனுபவிக்கும் இந்திரன் போகி என கூறியதை கேள்விப்பட்டது உண்டு.
போகிப்பண்டினை அன்று கிராமங்களில் அனைத்து வீட்டிலும் காப்பு கட்டுவார்கள், காப்பு கட்டுவது என்பது அந்த ஆண்டின் இறுதி நாளை கழிவடை நாளாக கருதி அந்த நாளோடு அனைத்து கெட்டவைகளும் அழியட்டும் என்று காப்பு கட்டுவர். வேப்பந்தலை, ஆவாரம் பூ, பூலப் பூ இது மூன்றையும் சேர்த்து கட்டு வைப்பதற்கு காப்பு கட்டு என்று பெயர்.


இந்த வருடம் நாம் நமது பழைய பொருட்களை மட்டும் அல்ல நமக்கு தேவையில்லாத நினைவுகள், எண்ணங்கள் அனைத்தையும் தீ இட்டு அழித்து விட்டு இத்தைத் திருநாளை புதிய எண்ணங்களுடனும், புதிய முயற்சியுடனும் இத் தமிழ் புத்தாண்டையும், பொங்கல் திருநாளையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.
Read more »

தலை வாழை இலை

Tuesday, January 5, 2010 25 comments

தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் அதுவும் எங்க கொங்கு மண்ணில் தலை வாழை இலையுடன் தான் விருந்தே நடக்கும். அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். நான் வார இறுதிநாட்களில் எங்க ஊரில் தான் இருப்பேன். ஊரில் இருக்கும் நாட்களில் மதிய உணவு நிச்சயம் தலை வாழை இலையில் தான் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்க இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டுகிலேயே உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்குத தெரியவரும்.தலை வாழை இலை போட்டு மரியாதை, பணிவு, சூடான சாப்பாடு அன்புடனும் கிராமத்து மண்வாசனையுடனும் கூடிய விருந்துக்கு ஏங்காதவர்கள் உண்டா...? இல்லை என்பது என் கருத்துநம்ம விருந்தாளிகளுக்கு வாழை இலையில் குறிப்பாக தலை வாழை இலையில் விருந்து படைப்பது தான் நம் தமிழர் பண்பாடு. நாம் தட்டில் சாப்பிடுவதற்கும் இழையில் சாப்பிடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு தட்டில் சாப்பிடும் உணவை விட இலையில் சாப்பிடும் போது அதன் சுவை இன்னும் அதிகமாகிறது. எங்களது ஊரில் விருந்துக்கு சென்றால் அதுவும் சைவ விருந்து என்றால் முதலில் தலை வாழை இலையில் தண்ணீர் இட்டு பின்பு இலை நிறைய உணவுகளை வைப்பார்கள் அதில சாம்பார் சாப்பிடும் அதற்கு அடுத்து புளிக்குழம்போ அல்லது மோர்குழும்பு இருக்கும் இதன் சுவைகளை விட அடுத்து ரசத்தில் சாப்பிடும் சுவை எப்படிச் சொல்வது அவ்வளவு சுவையாக இருக்கும். நான் இலையில் ரசம் சாப்பிடுவதற்கு அடிமை என சந்தோசமாக கூறுவேன். அடுத்து தயிர் இதற்கு அப்புறம் பாயசத்தை இலையில் ஊற்றி குடிப்பதற்கு என எங்க ஏரியாவில் ஒரு கூட்டமே இருக்கு. என்னைப் போல் எங்க ஊர் நண்பர்களுக்கு இலையில் சாப்பிடுவது தான் பிடிக்கும்  ஏன் என்றால் அப்ப தான் நிறை சாப்பாடு வைப்பார்கள். அதுவும் அசைவ விருந்து என்றால் இலை நிறைய மட்டன், சிக்கன் ஆக இருக்கும். மீன் குழம்பை இலையில் சாப்பிடும் சவையே தனி.

வாழை இலையின் பயன்கள்:
1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்
2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்
3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்
4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.
5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.
6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்
7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.


நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே. என்ன நண்பர்களே வாழை இலையில் சாப்பிடக்கிளம்பிட்டிங்களா.......?
Read more »

அந்தியூர் மேற்கு தொடர்ச்சி மலையில் ஓர் சுற்றுலாத்தலம்

Monday, January 4, 2010 37 comments
மூன்று நாட்கள் விடுமுறை வியாழன் இரவு மாமா வீட்டிற்கு சென்று அங்கு அக்கா குழந்தைகளுடன் இந்த வருடம் ஆங்கிலப்புத்தாண்டை கொண்டாடினேன் முதன் முறையாக குடும்பத்துடன் புத்தாண்டை (வேறு எதுவும் சாப்பிடமுடியாமல்) கொண்டாடினேன். அடுத்த நாள் காலை புத்தாடை அணிந்து (மாமா வாங்கிக் கொடுத்தது தான்) புகழ் பெற்ற அந்தியூர் பத்ராகாளியம்மன் கோவிலில் தரிசனம் முடித்து விட்டு குடும்பத்துடன் டிவி பார்த்துக்கொண்டு இருக்கும் போது குடும்ப நண்பர் மதன் வந்தார். அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது மாலை வரட்டுப்பள்ளம் அணைக்குச் செல்லலாமா? என்றார் மாலை வேலைகளில் யானை தண்ணீர் அருந்த வரும் அனைவரும் போகலாம் என்று முடிவு செய்தோம்.
இந்த அணை மேற்கு தொடர்ச்சி மலையின் தொடக்கத்தில் அமைந்துள்ளது. மதிய உணவிற்குப்பின் நான் வருகிறேன் வரவில்லை என்று சின்ன சின்ன சண்டையுடன் குடும்பம்ன சண்டை இருக்குமில்ல) ஒரு வழியாக புறப்பட்டோம். மாலை நான்கு மணிக்கு புறப்பட்டு வழி எங்கும் இயற்கையை ரசித்துக் கொண்டு சென்றோம். இந்த வரட்டுப்பள்ளம் அனைதான் வீரப்பன் இருக்கும் போது குளிக்க வருவான் என்று ஒரு பேச்சு உண்டு. அதனால் இங்கு அதிரடிப்படை முகாம் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது அது இப்போதும் இருக்கிறது.

அந்தியூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில்
மேற்கு தொடர்ச்சி மலை எல்லை ஆரம்பம்

காட்டுக்குள் சென்றவுடன் வனத்துறையினரின் செக்போஸ்ட்


மலையில் மக்கள் வசிக்கும் பகுதிகளான பர்கூர் மற்றும் கர்நாடக மாநில ஊர்கலான கர்கேகண்டி,கொள்ளேகால், மைசூர் செல்லும் பாதை இது.


வரட்டுப்பள்ளம் அணைக்குச் செல்லும் காட்டுவழிப்பாதை


வரட்டுப்பள்ளம் அணையின் முகப்பு பகுதி

 
வரட்டுப்பள்ளம் அணையின் மேல் பகுதி
 
 வரட்டுப்பள்ளம் அணையில் தண்ணீர்
 
 கடல் போல் காட்சி அளிக்கும் தண்ணீர்

 
மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அணை

 
அணையின் உட்புறத்தோற்றம்
 
விவசாயத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர்

வரட்டுப்பள்ளம் அணை 1980ம் ஆண்டு திறக்கப்பட்டது. இயற்கையான இடத்தில் சுத்தமான காற்று, சுத்தமான தண்ணீர், நல்ல குளிர் என அழகாக அமைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தருபவர்களுக்கு இது அடுத்த சுற்றுலாமையமாகும் யானை,காட்டெறுமை, மான், மயில், கரடி, போன்ற காட்டில் வாழும் விலங்குகள் தண்ணீர் அருந்த வருவதை இயற்கையாக பார்க்க முடியும். இதை அனைத்தையும் ரசித்து விட்டு நாங்கள் திரும்பும் போது 6 மணி ஆகிவிட்டது. இங்கு யாரும் வர மாட்டார்கள் என எண்ணித்தான் நாங்கள் தயக்கத்துடன் சென்றோம் ஆனால் 200பேருக்கு மேல் இங்கு இயற்கையை ரசித்துக் கொண்டு இருந்தனர். செலவே இல்லாமல் சுற்றுலா சென்ற திருப்தியுடன் வீடு திரும்பினோம்...
Read more »